உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 5
An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs
முந்தைய அத்தியாயத்தில் கேட்ட மூன்றாவது கேள்வி – உங்கள் நிறுவனத்தில் உங்களுக்குப் பிடித்த வேலை மற்றும் பிடிக்காத வேலை என்று ஏதாவது இருக்கிறதா?
முரண்பாடான ஆர்வங்கள்

பாடமே படிக்கப் பிடிக்காத ஒருவர் சினிமாவில் தனது அபிமான ஹீரோவின் படங்களை வரிசையாக அவை வெளியான வருடம் வரைக்கும் நியாபகம் வைத்துக் கொள்கிறார்.
இசைப் பின்னணி இல்லாத குடும்பத்தில் பிறந்தவர் மிகப்பெரிய இசைமேதையாய் வளர்கிறார்.
கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்யாத ஒருவர் தனது வீட்டைக் கட்டும்போது மிகப் பக்குவமாகத் திட்டமிட்டு வேலைகளை முடிக்கிறார்.
உற்பத்திப் பிரிவில் வேலைக்கு சேர்ந்த ஒருவர் வாடிக்கையாளருடன் நல்லுறவை வளர்த்துக்கொள்கிறார். சில நேரங்களில் ஆர்டரும் எடுத்துவருகிறார்.
இப்படி உங்கள் அனுபவத்தில் இன்னும் பல முரண்பாடான வெற்றியாளர்களைப் பார்த்திருப்பீர்கள். இதன் அடிப்படை – ஒவ்வொருவருக்கும் இயல்பாய் அமையும் நாட்டம். ஒரு வேலை அல்லது செயல் மீதான அதீதமான ஈர்ப்பு.
இயற்கையாய் வாய்த்த திறன்கள் – உதாரணமாக நல்லகுரல் வளம், சிறு வயதில் கிடைக்கும் வெற்றி மற்றும் பாராட்டுக்கள் – கணக்குப் புதிரில் எளிதாக வென்ற குழந்தைக்கு கணிதத்தில் ஏற்படும் ஆர்வம் போல, ஆழ்மனதில் ஏற்படும் தாக்கம் – தன்னை மிகவும் பாதித்த ஒருவர் செய்யும் வேலையைத் தாமும் விரும்புவது, என்பதைப் போன்ற பல்வேறு காரணங்களால் இவ்வகையான ஆர்வம் ஏற்படுவதாக மனவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
பாரபட்சமான ஆர்வங்கள்
ஒருமுறை இவ்வாறான ஆர்வம் ஏற்பட்டுவிட்டால் அது பெரும்பாலும் குறைவதில்லை. உதாரணமாக, மேடைப் பாடல்களைப் பாட ஆர்வம் கொண்ட ஒருவர், பல தோல்விகளையும் தாங்கி பிறகு புகழடைகிறார். ரிலீஸ் ஆன அன்றே தன் தலைவனின் படத்தைப் பார்க்க தேர்வைப் புறக்கணித்த மாணவர்களைப் பார்த்திருப்போம்.
இவ்வாறான இளவயதில் கிடைக்கும் வெற்றி அல்லது பாராட்டுகளால் நமக்கு ஒருவித வெற்றி உணர்வு ஏற்படுவதாகவும் அது மூளையில் டோபாமைன் என்ற ஆனந்த ரசாயனத்தை சுரக்க செய்வதாகவும் உளவியலாளர்கள் கூறுகிறார்கள். இதனால், நாம் அத்தகைய விஷயங்களைத் தொடர்ந்து செய்கிறோம். அப்படித் திரும்பத் திரும்ப நாம் ஒரு விஷயத்தை செய்வதால், நமக்கு அது இன்னும் சிறப்பாக வருகிறது; நமக்கு அந்த விஷயம் பிடித்தும் போகிறது. பழக்கம் என்ற சூழல் உருவாகிறது.
உங்களுக்கும் சிறுவயதில் இது போன்ற ஆர்வம் இருந்திருக்கும்; இப்போதும் இருக்கும். அதே சமயம், உங்களுக்கு ஒரு விஷயத்தில் அமையும் ஆர்வம் அதே அளவுக்கு வேறு விஷயங்களில் ஏற்படுவதில்லை. இந்தியாவில் கிரிக்கெட்டின் மீது இளைஞர்களுக்கு இருக்கும் ஆர்வம் ஹாக்கியின் மீது இல்லை. இரண்டுமே ஒரே மாதிரியான அணி விளையாட்டுகள் தான். இன்னும் சொல்லப்போனால், ஹாக்கிதான் இந்தியாவின் தேசிய விளையாட்டு.
சரி அப்படி என்ன எனக்கு பிடிக்கும்?
உள்ளார்வம் Vs வெளியார்வம்
இரண்டு நண்பர்கள் ஒரு பகல் முழுவதும் ஓர் AC ரயிலில் பயணம் செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு பக்கத்துக்கு சீட் கிடைக்கவில்லை. தனித்தனியாகவே பயணம் தொடருகிறது.
இறங்கும்போது ஒரு நண்பர் தனியாக வருகிறார். தனது புத்தகத்தையும் ஹெட் போனையும் பைக்குள் வைக்கிறார்.
இன்னொரு நண்பர், அருகில் இருந்த சக பயணிகளிடம் பேசிக்கொண்டே இறங்குகிறார். ஒரு வயதான தம்பதிகளின் பெட்டிகளை இறக்கித் தருகிறார் அவர். “நீங்க திரும்ப ஊருக்குப் போறதுக்குள்ள நம்ம வீட்ல சாப்பிட்டுத்தான் போறீங்க” என்று அந்த முதியவர் அந்த நண்பருக்கு அன்புக்கட்டளை இடுகிறார். “அதான் சொல்லிட்டிங்க இல்ல சார், ஒரு கால் பண்ணிட்டு நிச்சயம் வருவோம். நீங்களே அடிச்சு அனுப்பற வரைக்கும் பேசிட்டுதான் கிளம்புவோம்” என்று அந்த நண்பரும் சிரித்துக்கொண்டே அவர்களை வழிஅனுப்புகிறார்.

அதுவரை பக்கத்தில் நின்றிருந்த சகவயது நபர், அவர் தோள்மீது கைவைத்து “என் கார்டு கொடுத்திருக்கேன். நீங்க இன்னிக்கு மீட் பண்ணப் போறவர் என் ஜூனியர்தான். தேவைப்பட்டா அங்கிருந்தே மொபைலுக்குக் கூப்பிடுங்க” என்று சொல்லிவிட்டு நகர்கிறார்.
இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டே நடந்து வந்த முதல் நண்பர் கேட்கிறார், “என்னப்பா? உங்க சொந்தக்கரங்களா? நல்லவேளையா அவங்க பக்கத்துல உனக்கு சீட் கிடைச்சிருக்கு” என்கிறார். இரண்டாம் நண்பர் சொல்கிறார், “இல்லப்பா, சொந்தக்காரங்க எல்லாம் இல்ல. பொழுது போகாம சும்மா பேசிக்கிட்டு வந்தோம். அப்படியே நெருங்கிட்டோம்”.
இப்போது இந்த இரண்டு நண்பர்களுக்கும் சூழ்நிலை ஒன்றுதான். ஆனால் அவர்கள் நடந்துகொண்ட விதங்கள் முற்றிலும் மாறுபட்டவை. ஒருவருக்கு அறிமுகமில்லாதவரோடு பேச விருப்பமில்லை. இரண்டாம் நண்பருக்கு அப்படிப் பேசப் பிடித்திருக்கிறது. அவ்வளவுதான் வித்தியாசம்.
புதுமை Vs முழுமை
அதே இரண்டு நண்பர்கள் மத்திய உணவுக்கு அவர்களின் வழக்கமான செட்டிநாடு உணவகத்திற்கு வருகிறார்கள். ஆனால், அங்கிருந்த செட்டிநாடு உணவகம் மாற்றப்பட்டு, வேறொரு சைனீஸ் உணவகம் அவர்களை வரவேற்கிறது.
“அதுவா சார், பழைய ஓட்டல் முதலாளி அவர் பையங்கூடவே அமெரிக்கா போய்ட்டாரு. ஓட்டல் கைமாறிடுச்சி. ஒரு வாரம் ஆகுது சார். வாங்க சார், இந்த முறை சைனீஸ் ஸ்பெஷல் சாப்பிட்டுப் பாருங்க!” என்கிறார் வாசலில் நின்றிருந்த காவலாளி.
ஒரு நண்பருக்குப் பெரிய ஏமாற்றம். அவர் முகத்திலேயே அந்த ஏமாற்றம் தெரிகிறது. “இல்லப்பா, இப்போ ரிஸ்க் எடுக்கவேண்டாம். நம்ம நண்பர்கள் கிட்ட ரிவியூ கேட்டுட்டு நாளைக்கு இங்க வரலாம். புதுக் கடையில ஏதாவது சாப்பிட்டு உடம்புக்கு ஒதுக்காம போய்டப்போகுது. நம்ம வழக்கமா சாப்பிடுவோமே அது என்ன? அந்த திண்டுக்கல் ஓட்டல் அங்கே போயிடுவோம்” என்கிறார்.
இரண்டாம் நண்பருக்கு பதட்டமோ ஏமாற்றமோ எதுவும் இல்லை. அவர் கொஞ்சம் குதூகலமாகவே இருக்கிறார். “அட வாப்பா, புதுசா என்னதான் இருக்குன்னு பார்த்திடுவோம். நம்ம சாப்பிட்டு போய், இந்த ஊர்லயே இருக்க உங்க தம்பிகிட்ட புது ஓட்டல் பத்தி சொல்லுவோம். இவ்வளவு தூரம் வந்ததுக்கு புதுசா ஏதாவது செய்ய வேண்டாமா?” என்கிறார்.
மீண்டும் ஒரே சூழ்நிலைக்கு இரண்டு வெவ்வேறு ரியாக்சன். ஒருவருக்குப் புதுமை பிடித்திருக்கிறது. இன்னொருவர் தனது திட்டப்படியே போக விரும்புகிறார்.
நிறுவனத்திற்கான உளவியல் (Organisational Psychology)
ஒருவரின் மனநிலைப் படி அவரது ஆளுமையை அறியும் பெர்சனாலிட்டி டெஸ்ட், சைக்கோமெட்ரிக் டெஸ்ட் போன்ற பல ஆழமான உளவியல் பயன்பாடுகள் இன்று மேலாண்மையில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், அவை கொஞ்சம் சிக்கலானதாகவும், நேரடியாக ஒரு நிறுவனத்துக்குள் பொருத்திப் பார்க்க முடியாமலும் இருக்கின்றன.
எளிதாக சிறு தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தக் கூடிய வகையில் அடிப்படையான ஒரு சைக்கோமெட்ரிக் முறையை இங்கு பாப்போம். மேலே குறிப்பிட்ட இரண்டு ஆளுமை வகைகளைக் கொண்டு ஒரு மேட்ரிக்சை உருவாக்கலாம்.
2 வகை ஆளுமைக் காரணிகள்
- புதுமை விரும்பி & முழுமை விரும்பி
- உட்புறப் பார்வை & வெளிப்புறப் பார்வை
ஆனந்தக் கட்டம்
மேற்கண்ட இரண்டு ஆளுமைக் காரணிகளைக் கொண்டு நாம் நான்கு அடிப்படை ஆளுமைகளை வரையறுக்கலாம். அவற்றைக் கீழ்காணும் நான்கு கட்டங்களாக வரையறுக்கலாம். கீழே ஒவ்வொரு கட்டத்திற்குமான முதன்மையான குணநலன்களைக் குறிப்பிடுகிறேன். இவை ஒருவர் அந்தக் கட்டத்தின் extreme எனும் அதிகபட்ச நிலையில் இருந்தால் வெளிப்படும் குணநலன்கள்.

ஒருவருக்கு ஒரே ஓர் ஆளுமைதான் இருக்கவேண்டும் என்பதல்ல. நம் அனைவருக்கும் இந்த 4 ஆளுமைகளும் இருக்கின்றன. ஆனால், அவற்றில் ஒரு ஆளுமை மற்றவற்றைவிட அதிகமாக வெளிப்படும். அந்த ஆளுமைக் கட்டத்தையே நான் ஒருவரின் ஆனந்தக் கட்டம் (Joyous Quadrant) என்று சொல்கிறேன்.
ஏனென்றால் அவர் அந்த ஆளுமைக் கட்டத்தில் இருக்கும்போது ஒருவித மகிழ்ச்சியையும், தன்னிறைவையும் உணர்வார். மற்ற கட்டங்களில் அவர் சிறப்பாக வேலை செய்தாலும் அவரால் மனநிறைவை அடைய முடியாது.
அடுத்து …
உங்கள் ஆனந்தக் கட்டம் எது? ஒவ்வொரு கட்டத்தில் இருப்பவரின் மனநிலைகள் என்னென்ன? அது ஒரு நிறுவனத்தில் எப்படி எதிரொளிக்கிறது என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
Comments are closed